Saturday, May 25, 2013

ஓராண்டானது அண்ணாச்சி
 -ந.பெரியசாமி


எது ஒள்றிலும் புழங்கத் துவங்கும் முன்

எளிதாக அதை மனம் ஒத்துக்கொள்வதில்லை…



சேலத்தில் நிகழ்ந்த இலக்கிய நிகழ்வு ஒள்றை முடித்து இரவு விடுதியில் அமர்ந்திருந்தபோது உடன் சிபிச்செல்வனும் இருந்தார். உடையாடலின் இடையே நிறைய்ய இணைய இதழ்களிலும் முகநூலிலும் கவிதைகள் எழுதிறீங்க இது வேண்டாமே. அச்சு இதழுக்கு அனுப்புங்க. அதிகமாக எழுதாதிங்க என்றார். நிறைய்ய நண்பர்களும் இக்குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டிருந்தனர். வழக்கம் போலவே சிரித்துக்கொண்டே அமைதியாக இருந்தேன். ஏனோ குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மறுப்பு தெரிவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. உடனடியாக மறுப்பு தெரிவித்தால் குற்றச்சாட்டுகளை திரும்ப யோசிக்கவும் மாற்றங்கொள்ளவும் முடியாதென்பதால். நம்மீது அக்கறை உள்ளவர்கள்தானே நமை குற்றம்சாட்டுவார்கள்.



2004ல் எனது முதல் கவிதைதொகுப்பு நதிச்சிறை வந்த பிறகு அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன். ஒன்றிரண்டு அச்சு இதழ்களில் வந்துகொண்டிருந்தாலும் நிறைய்ய கவிதைகள் நோட்டுகளிலேயே அடை காத்துக்கொண்டிருந்தன. இச்சூழலில் எனது மொபைல் பழுதடைந்துவிட புதிய மொபைல் ஒன்று வாங்கினேன். அதில் தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்க முகநூல் ஆரம்பித்தேன். பின் மெய்ல் அனுப்ப கற்றுக்கொண்டேன். நிறைய்ய இணைய இதழ்கள் இருப்பதை அறிந்தேன். புதிதாக கிடைத்த சைக்கிளை எப்பவும் ஓட்டிக்கொண்டிருக்கும் சிறுவனின் மனநிலையோடிருந்தேன். இருக்கும் எல்லா கவிதைகளையும் தினம் ஒன்றாக வெளியிட்டுக்கொண்டிருந்தேன்.  உடனடியாக விருப்பம் தெரிவிப்பதும் அவர்களது போட்டோவோடும் எண்ணிக்கைகளை பார்க்க சந்தோசமாகத்தான் இருந்தது. நிறைய்ய வெளிநாட்டு நண்பர்களின் நட்பும் கவிதைகள் குறித்த உரையாடலும் கிடைத்தது.  திடுமென ஒரு சந்தேகம் எழுந்தது இணைய இதழ்கள் எதை அனுப்பினாலும் பிரசுரித்துவிடுவார்களோவென. எனக்கு திருப்தி ஏற்படுத்தாத என் சில கவிதைகளை அனுப்பிப்பார்த்தேன். யாரும் வெளியிடவில்லை. மேலும் எனக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. பஸ் பயணம், அலுவலகத்தில் டீ டைம், லஞ்ச் டைம் என என்னேறமும் செல்வழியாக இணையத்தோடே இருந்ததால் நிறைய்ய எழுதுவதாக தோற்றம் வந்துவிட்டது.



இச்சூழலில் சிபி அண்ணாச்சி தொலைபேசியில் உரையாடினர். தான் ஒரு வலைப்பக்கம் துவங்கி அதில் இலக்கிய இணைய இதழ் நடத்தப் போவதாக. சேலத்தில் அறையில் அவர் பேசியது காட்சியாக ஓடி மறைந்தாலும். மாற்றங்களை கொண்டாடும் மனோபாவத்தோடு உற்சாகமாக அவரோடு உரையாடினேன். இலக்கியச் சுற்றம் என பெயரிட்டு  படைப்புகளை வாங்கி வெளியிட்டார். அவரது வலைப்பக்கத்தின் பார்வையாளர்களின் பங்களிப்பு  அதிகரிப்பதைக் கண்டு அவருக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது.



கொஞ்ச நாட்கள் அப்படியே நகர மீண்டும் பேசினார் அடுத்த இதழ் மலைகள்.காமாக வரப்போகிறதென. வழக்கம்போலவே அவரோடு உற்சாகமாக பேசினேன். சமரசமற்ற படைப்புத் தேர்வு, புதியவர்களை வரவேற்பது, ஆளுமைகளை எழுதச்செய்வது, நல்ல மொழிபெயர்ப்புகளை கொண்டு வருவது என அவரின் கடின உழைப்பை செலுத்தியபடியே இருந்தார். ஆங்காங்கே நண்பர்களும் மலைகள் குறித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.



நேரில் பார்க்கும் போதும், முகநூலில் உடையாடும்போதும் மலைகள் மலைகள் என ஓயாது பேசிக்கொண்டே இருப்பார். எரிச்சலாகக் கூட இருக்கும். எப்பப்பாரு மலைகள் மலைகள் என பேசிக்கிட்டே இருக்காறேவென. நிறைய்ய நண்பர்களும் குறைபட்டுக்கொண்டார்கள். யாரையாவது பார்த்தால் வாங்க எப்படி இருக்கீங்க என கேட்ட அடுத்த நொடியே நம்ம சைட் பார்த்தீங்களா அந்த மொழிபெயர்ப்பு படிச்சீங்களா இந்தக் கவிதையை படிச்சீங்களாவென மலைகள் குறித்தே பேசிக்கொண்டே இருப்பார்.



சமீபத்தில் ஓசூர் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த நம்மாழ்வார் ஒருவன் எத்துறையை தேர்ந்தெடுக்கிறானோ அத்துறை குறித்த அக்கறையும் அதுசார்ந்த சிந்தனையோடும் இருந்துகொண்டே இருந்தால் அத்துறையில் அவன் பெரும் நிபுணனாக வரமுடியும். எல்லோரும்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் யாரோ ஒரு சிலர் மட்டும்தானே ஒலிம்பிக்கில் ஓட முடிகிறது என்றார். அப்போது எனக்கு சிபி அண்ணாச்சியும் மலைகள்.காமும் நினைவுக்கு வந்தது.



மலைகள்.காம் இணைய இதழாக இருந்தபோதும் குறித்த காலத்திற்கு கொண்டு வரும் ஒழுங்கும், அதற்காக தன்னை எப்பவும் ஒப்புக்கொடுக்க காத்துக்கொண்டிருப்பதும், சலிப்படையாத உழைப்பும் இன்னும் மலைகள்.காமை உலகத்தாரிடையே கவனப்படுத்தும் என நம்புகிறேன்.

இரண்டாம் வயதை துவங்கும் மலைகள்.காமை உங்களைப் போன்றே நானும் மகிழ்வோடு வரவேற்கிறேன்.

nantri:malaigal.com

No comments:

Post a Comment