Wednesday, December 18, 2013

வறண்ட நீர்த்துளிகள்...



 
தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் பழுதடைந்து விடுகிறது. சரிசெய்யும் பிரிவில் இருந்த வேலையாள் மூன்று நாள் விடுப்பில் சென்றிருந்தார். மற்றைய வேலையாட்கள் முயற்சிக்கிறார்கள். ஒரு பொழுதே கழிய சரிசெய்ய இயலவில்லை. நிர்வாகத்தின் அழுத்தம் தாளாது காண்ட்ராக்டில் பழுது நீக்க ஆட்கள் வருகிறார்கள். அவர்களாலும் இயலாது போக நிர்வாகம் பெரும் பதற்றமாகிவிடுகிறது.

விடுப்பு முடிந்து வழக்கம் போல் வேலைக்கு வருகிறார். அவரது உயர் அதிகாரி  மூன்று நாளாக நிகழ்ந்ததைக் கூறாமல் அந்த இயந்திரத்தின் பெயரைக்கூறி பழுது ரிப்போர்ட் வந்திருக்கு போய் பார்த்து வாவென ஆனையிடுகிறார். இவரும் சென்று பார்த்து ஒரு மணி நேரத்திற்குள் பழுது நீக்கிவிடுகிறார். இயந்திரம் உற்பத்திகளை பிறப்பிக்கிறது. நிர்வாகம் இயல்பாகிறது.

இப்படியான தொழிலாளர்கள்  ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நிறைய்ய உண்டு. ஒவ்வொருவரும் தனக்கான தனித்திறன்களோடுதான் பணியாற்றுகிறார்கள். அரசின் கொள்ளை (கொள்கை) மாற்றத்தால் உலகமயமாக்கல் வருகிறது. அதன் பாதிப்பு வெகு விரைவாகவே தொழிற்சாலைகளுக்குள் ஆபத்தினை உண்டாக்குகிறது. ஒரு பொருளின் உற்பத்தியில் 10 இயந்திரம் இருப்பின் 10 வேலையாட்கள்  இருப்பார்கள். ஆனால் வளர்ச்சியால்10 இயந்திரங்களை இயக்க ஒன்றிரண்டுபேர் போதுமானதாக இருக்கிறது. மீதி ஆட்கள் விருப்ப ஓய்வு கட்டாய ஓய்வு எனும் பெயர்களில் வெளியேற்றம் நிகழ்கிறது. தனிமனித தேவையும் திறமையும் பலனற்றுப்போகிறது. வெளியேறிய சிலர் வேறுவேறு தொழில் செய்து பிழைக்கிறார்கள். சிலரோ மன அழுத்தத்தால் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிட, காலப்போக்கில் மதுவே உணவாக மாற்றம்கொள்ள அவர்களது குடும்பம் பெரும் சிக்கலுக்குள்ளாகிறது.

நண்பர் ரகுபதி மிகத் தேர்ந்த எலக்ட்ரீசன். அவரும் ஆட்குறைப்பிற்கு ஆளாகியது பெரும் அதிர்ச்சியானது.  நிர்வாகத்தின் நோக்கத்திற்கு திறமை, திறமையின்மை என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர்களது நோக்கத்தில் வெற்றிகொள்வது மட்டுமே அவர்களுக்கு இலட்சியம். பாதிப்பிற்கு உள்ளான நண்பர் பெரும் குடிகாரராக மாறினார். அப்படி மாறியிருக்கத் தேவையில்லைதான். அவரைத் தேடி ஓசூரில் சிறுதொழில் நடத்தும் முதலாளிகள் அலைந்துகொண்டே இருப்பார்கள்.  எவ்வளவு போதையில் இருந்தாலும் டெஸ்ட்டரை கையில் பிடித்தால் பிதாமகனாகிவிடுவார். பிரச்சினை சரிசெய்யப்பட்டதும் மீண்டும் போதை மனநிலைக்குத் தயாராகிவிடுவார். ஒரே மாதிரியான சுழற்சி, பாதுகாப்பான வேலை என்ற மனநிலையில் பெரும் கட்டத்தை நமக்கு நாமே போட்டுக்கொள்வதால் சூழல் மாற்றம் கொள்ள புதிய சூழலுக்கு தன்னை தகவமைக்காமல் நொடிந்து போகிறார்கள் பெரும்பாலானோர். வீதியில் டீக்கடை, கபாப் கடை, வடை போண்டா கடையென எதையாவது செய்து வாழ்வை மீட்டெடுக்கும் தொழிலாளிகள் ஓசூரில் நிறைய்ய உண்டு. ரகுபதி போன்று சிக்கிச் சிதைந்த தொழிலாளிகளும் நிறைய்ய...

பனி முடிய வீட்டிற்கு செல்லும்போது ஏதாவது மூலையில் யாராவது வீழ்ந்து கிடக்க மனம் பதற்றம் கொள்ளத் தொடங்கிவிடும் ஐய்யோ ரகுபதியாக இருக்கக் கூடாதென. நிறைய்ய நாட்கள் அப்படி கிடந்திருக்கிறார். தூக்கி சென்று வீட்டில் விட்டிருக்கோம். நம்பிக்கையூட்டும் சின்னஞ்சிறு நீர்த்துளி கூடவா இவரது வாழ்வில் இல்லாது வறண்டபோயிருக்குமென தூக்கம்கெட்டு யோசித்து கிடந்ததுண்டு. ஓசூரில் தொழிலாளிகள் ஆளுமைகளோடு இருந்த காலங்களில் தொழிற்சங்கக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்ததுண்டு. பெரும் வெற்றிகளையும் நியாயங்களையும் அடைந்ததுண்டு. ஆனால் நடப்பு காலங்களில் தொழிற்சங்கம் பெரும் சவாலை சந்திக்கிறது. கோரிக்கைகளை வைத்து போராடி வெற்றி கொள்வது என்பது பெரும் கனவாகிவிட்டது. தற்சமயம் நிர்வாகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்து ஒன்றிரண்டு பலன்களை மட்டுமே அடைய முடிகிறது. நிர்வாகம் அழித்து அழித்து போடும் கோடுகளில் வரிசை குலையாது ஒழுங்காக நடக்கவைக்கும் வேலையை தொழிற்சங்கள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் அவலம்தான். எல்லாவற்றிற்குமான நியாயங்கள் கற்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மே-1ம் மிட்டாய் சப்பும் சம்பிராதய தினமாக மாறிக்கொண்டிருக்கிறது.

நன்றி: மலைகள். காம்

No comments:

Post a Comment