Saturday, May 31, 2014

நீரைத் தேடிப் பயணிக்கும் வேர்களாக...

படித்து முடித்தோம், வேலைக்குச் சேர்ந்தோம், நன்றாக சம்பாதித்தோம், திருமணம் முடித்து செட்டிலாகிவிட்டோம் எனும் மனநிறைவோடு வாழ்வை நகர்த்தாது தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் தன் மாதச்சம்பளத்தில் சிறு தொகையை பகிர்ந்து 1995ல் ‘அன்புக்கரங்கள்’ எனும் அமைப்பை உருவாக்கினர். அதன் மூலம் மேல்படிப்பிற்கு வழியற்று ஆர்வம் இருந்தும் வறுமையால் படிக்க இயலாது தவிக்கும் மாணவ மாணவிகளை கண்டடைந்து அவர்களுக்கு உதவத் துவங்கினர். பின் மருத்துவச் செலவிற்கும் உதவத்துவங்கினர். நீரைத் தேடிப் பயணிக்கும் வேர்களாக தங்களின் பயணத்தை வேறுவேறு தளங்களில் துவங்கினர்.

2004-ல் இரத்தக் கொடையாளர்களை ஒருங்கிணைக்க ‘உதிரம்’ அமைப்பும், கண்தானம் செய்ய விரும்புவர்களுக்காக 2009ல் ‘விழி’ என்ற அமைப்பையும், குழந்தைகளின் மாற்றுச் சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்க ‘குட்டி யானைகள்’ என்ற அமைப்பையும் உருவாக்கி அன்புக்கரங்களின் பரிணாமம் நீண்டுகொண்டே சென்றது.

‘கூட்டு முயற்சி’ என்னும் வார்த்தையில் மிகுதியான நம்பிக்கை வைத்திருப்பதால் எந்த ஒரு தனிநபர் பெயரையும் அமைப்போடு பொருத்திப் பார்க்காது எல்லோருக்குமானதாக இருப்பதால் அது தன் தொடர் பயணத்தில் எவ்வித இடையூறுமின்றி வளர்ந்துகொண்டிருக்கிறது.

01 மே 2014 உதிரம் அமைப்புத் துவங்கி பத்தாம் ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் மே முதல்நாள் இரத்தக்கொடை முகாம் நடத்தப்படும். தொழிலாளர்களும் பொதுமக்களும் ஆர்வாமாக வந்து பங்குகொள்வார்கள். இவ்வாண்டு இரத்தக்கொடையாளர்களின் எண்ணிக்கை 949 ஆக எட்டியது. ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளும், பெங்களுர் டி.டி.கே இரத்த வங்கியும் வந்திருந்து இரத்தக்கொடை முகாம் சிறப்புற உதவினர்.

குடும்பம் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தங்களின் மேலான உழைப்பை எவ்வித சலிப்புமின்றி ஆண்டுதோறும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆணும், பெண்ணுமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, அவர்களது குழந்தைகள் ‘குட்டி யானைகள்’ அமைப்பில் ஓவியம் வரைதல், கதை சொல்லல், விடுகதை போடுதல், சிறுசிறு விளையாட்டென கொண்டாட்டமாக இருப்பார்கள். சற்றே வளர்ந்த மாணவர்கள் மரக்கன்றுகள் விநியோகிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்வார்கள். முகாம் ஆண்டுதோறும் சிறக்க ஒசூர் ஆட்டோ தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின் சவாரியில் முகாமின் விளம்பரமும் பயணிக்கும். பழங்கள், பழச்சாறு, இளநீர், கேக், மற்றம் சிறுசிறு பரிசுபொருள்கள் என வருடம் தோறும் முகம் சுளிக்காமல் வழங்கிக்கொண்டிருக்கும் நன்கொடையாளர்களின் தாராளமான மனமும் முகாமிற்கு மகுடம் சேர்க்கும்.

ஓசூரில் வெவ்வேறு அமைப்புகளால் அடிக்கடி இரத்தக்கொடை முகாம் நடப்பதுண்டு. ஆனாலும் மே முதல்நாள் கொடுப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்தபடி இருக்கும். சுற்றுப்புற ஊர்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் தங்கள் இரவுப்பணி முடித்து நண்பர்களின் அறைகளில் தங்கி காலையிலேயே வந்திருந்து இரத்தம் வழங்கி பின்னர் ஊருக்குச்செல்வார்கள். தொழிலாளர்களின் மேதின பணிகளில் முதன்மையாக இரத்தம் கொடுப்பதும் முதன்மையானதாக மாறிப்போனது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் குழுவினர், தன்னார்வலர்கள், இரத்தக்கொடையாளர்கள், பார்வையாளர்கள் என திரண்டிருக்கும் அவையின் மையத்தில் ஒசூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களை அழைத்துவந்து ஒவ்வொருவராக அமரச்செய்து துண்டு போர்த்தி, மெடல், கேடயம், மற்றும் சிறு பரிசும் வழங்கி அவர்களை கௌரவித்தது நெகிழ்வான சம்பவமாக இருந்தது.

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் விபத்துகளின் எண்ணிக்கை பெரும் கவலையை அளித்துக்கொண்டிருக்கையில் உதிரம் போன்ற அமைப்புகளின் பணி மேலும் சிறக்க நாமும் பக்கமிருப்போம்..

1 comment:

Anonymous said...

வணக்கம்

ஏழைகளின் தேழன் என்றுதான் சொல்லவேண்டும் இப்படியான உதவும் கரங்கள் இருப்பதால் எமது சமுகத்தின் பிரச்சினைகள் ஓர் அளவு தீர்க்கப்படும் தேவை தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment