Sunday, January 11, 2015

தோட்டாக்கள் பாயும் வெளி – ந.பெரியசாமி நவீனம் கடந்து எட்டிவைக்கும் முதலாவது காலடி.
நா.பெரியசாமின் மூன்றாவது கவிதைத் தொகுப்புதான் – தோட்டாக்கள் பாயும் வெளி. இது புது எழுத்து வெளியீடாக வர இருக்கிறது. இவருடைய முதலாவது தொகுதியைப் படித்திருக்கவில்லை. இரண்டாவது தொகுப்பான ”மதுவாகினி” யை படித்திருக்கிறேன். அது குறித்து சிறு குறிப்பொன்றையும் எழுதியிருந்தேன். ஆனால், இந்த வெளிவர இருக்கின்ற தொகுப்பு அவருடைய இரண்டாவது தொகுப்பிலிருந்து பலவகைகளில் வேறுபட்டிருக்கிறது. இந்த வேறுபாடு என்பது வளர்ச்சியா என ஒரு கேள்வியை எழுப்பினால், கவிதை குறித்த பார்வைகள் வேறுபடும் வாசிப்புக்களைக் கொண்டவர்களுக்கு பல்வேறு வகையான பதில்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்தப் பதில் அனைத்தும், மதுவாகினி என்ற தொகுப்பில் இருக்கும் கவிதைகளிலிருந்து அதிகம் வேறுபட்டது என்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டதாகவே இருக்கும்.
கவிதை எடுத்துரைப்பு பெரிதும் மாறியிருக்கிறது. கவிதைச் சம்பவங்கள் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அருகருகே சொற்களை இணைக்கும் இவருடைய பாணி மாத்திரம் மாறியிருக்கவில்லை. இந்தப் பாணி நவீன கவிதையின் ஒரு முக்கிய குணம்தான். கவிதைச் சம்பவங்களை பிரதிக்குள் எப்படி அமைக்கிறார் என்பது முக்கியமாகப்படுகிறது. அந்தச் சம்பவங்களை இணைத்து கதையாடும் பிரதிச் செயல் என்பது, நிச்சயமாக நவீன கவிதையை கடந்து செல்ல முனையும் இன்றைய கவிதைகளின் இயங்குமுறைமையை தன்னிடம் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இவருடைய இந்த்த் தொகுதி முக்கியமானது என்றே கருதுகிறேன்.
இந்த்த் தொகுப்பிலிருக்கும் அத்தனை கவிதைப் பிரதிகளுக்கும் பொதுவான ஒரு வாசிப்பாக இதைச் சொல்லவில்லை என்பதும் முக்கியமானது.
நவீன கவிதைகள் எப்படியும் சூழலில் பங்கேற்பாளராக தன்னை வைத்துக்கொள்ளும். சூழலின் நேரடி பங்கேற்பாளராக தன்னை அப்பாவித்தனமாக நவீன கவிதைகள் காட்டிக்கொள்ளும். அதுதான் நவீன கவிதையின் பெருமையும் கூட. யாரவாது குசு உடுவது தொடங்கி, கொலை செய்வதுவரை தனது மூக்கை நுழைத்து கருத்துக்களை சொல்ல நவீன கவிதைகள் தயங்கியதே இல்லை. இந்த மனோபாவத்தை நவீன கவிதையின் மீது ஏற்றிவைத்திருப்பதற்கு பல காரணங்கள் இல்லாமலும் இல்லை. வாழ்வின் எந்த அம்சத்திலும் நான் கட்டாயம் இருக்க வேண்டுமென்று நவீன கவிதை அடம்பிப்பதாக நான் ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால், அப்படி ஒரு இடத்தை நவீன கவிதையின் மீது சுமத்தியிருக்கிறார்கள். ஏதோ அனைத்திற்கும் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் நவீன கவிதைக்கு இருப்பதுபோல, அது எந்த இடத்திலும் நுழைந்து தன்னை நிரூபிக்க முயற்சிக்கிறது. இது ஒருவகை அரசியல் மனோபாவம்தான். இது இனி நீடிக்க வாய்ப்புகளே இல்லை. இது ஒருவகைத் தலையீடு.
சூழலில் பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தகின்ற தலையீடு.
ஆனால், இன்றை கவிதைகள் அதாவது, நவீனத்தை கடக்க முற்படுகின்ற அல்லது கடந்த கவிதைகள், சூழலோடும், வாழ்க்கையோடும் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்வதில்லை. சூழலை வேறொன்றாகவும், கவிதையை வேறான்றாகவும் பார்க்க முற்படுகிறது. வாழ்வு,மற்றும் சூழல் போன்றவை புனைவுகளால் ஆனது என தெளிவாக நம்புகிறது. அதனால்தான், ஒரு உண்மைக்கு கொடுக்க வேண்டிய இடத்தை அது புனைவுக்கு கொடுக்க மறுக்கிறது. அதேநேரம் இன்று உண்மை என நம்மிடம் இருப்பதெல்லாம் புனைவுகள்தான் என அது தெரிந்து செயற்படுகிறது. வாழ்வின் தருணங்களிலோ, சூழலின் இயங்குதலிலோ நவீனம் கடந்த கவிதைகள் தலையிடுவதில்லை. ஆனால், அவைகளை கவிதைப் புனைகளுக்கான, வெறும் கவிதைச் சம்பவங்களாக மாத்திரமே கணிக்கின்றன.
சூழலை பார்வையாளராக உருவாக்க மாத்திரமே நவீனம் கடந்த கவிதைகள் முயற்சிக்கின்றன. பங்கேற்பாளர்களாகவோ அல்லது, வாழ்வின் சாட்சியங்களாகவோ அவை பொருட்படுத்துவதே இல்லை. அந்த அவசியமும் நவினம் கடந்த கவிதைகளுக்கு இல்லை.
ஏன் இதை விவாதிக்கிறேன் என்றால், இந்த நவினம் கடந்த கவிதைகள் தமிழில் உருப்பெறத்தொடங்கியிருக்கின்றன. அதற்கு இங்கு விரல்விட்டு எண்ணக்கூடிய சில கவிஞர்களையும் இனங்காட்டி முடியும். இது கவிதையின் சமகால பங்களிப்பு. அல்லது கவிதையின் புதிய மாற்றம் என்றே சொல்வேன். ந.பெரியசாமியின் இந்த தொகுப்பிலும் இப்படியான பல கவிதைகள் இருக்கின்றன. உண்மையில் இவரது கவிதைச் செயல் அடுத்த நிலைக்குத் தாவியிருக்கிறது என்று இதைவைத்தே நான் சொல்கிறேன். அதற்கு மிகச் சரியான உதாரணமாக, அவரின் தொகுப்பின் பேரில் அமைந்திருக்கும் – தோட்டாக்கள் பாயும் வெளி – என்ற கவிதையை சொல்ல்லாம்.
கவிதைத் தொகுப்புகள் விற்பனையாவதில்லை. பதிப்பகங்கள் விரும்பி பதிப்பிப்பதில்லை எனவும், இது போன்றும் பல கதைகள் நிலவுகிற இன்றைய நிலையிலும் தமிழ் கவிதை தன்னை பெரியதொரு மாற்றத்திற்குள் உட்படுத்திக்கொண்டிருக்கும் காலமும் இதுதான். இதை புரிந்துகொண்டு, விமர்சனங்களையும், விவாதங்களையும் முன்வைக்காமல் நமது விமர்சகர்கள்தான் (இன்று விமர்சகர்கள் இருக்கிறார்களா? சிலரைத் தவிர) தள்ளிப்போட்டுக்கொண்டு போகிறார்கள். கவிதையை அடையாளம் காணும் வாசிப்பிற்கேற்ற புரிதலை தமிழ் விமர்சகர்கள் வளர்த்துக்கொள்ளவில்லை. (சிலரைத்தவிர) அந்தச் சிலரும், சிறு குறிப்பு என்றளவிலே தமது பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
கவிதைப் பிரதியின் எல்லைக்குள்ளாக ஒரு சூழலையும், கவிதைச் சம்பவங்களாலான ஒரு வாழ்வையும் (அல்லது வாழ்வின் தருணங்களையும்) புனைவதும், அந்தப் புனைவை புறத்திலுள்ள வாழ்வுக்கும், சூழலுக்கும் பதிலீடற்ற ஒரு புதிய அனுபவமாக மாற்றுவதுமே நவீனம் கடந்த கவிதையின் அடிப்படைச் செயலாகும். அது எந்த வகையிலும் பிரதிபலிப்போ, பதிலீடோ அல்ல. முற்றிலும் புதிதாக எதிர்கொள்ள வேண்டிய புனைவு விதிகளால் வழிநடாத்தப்படுகின்ற ஒரு பிரதி அவ்வளவே. அதில் சூழலையோ, வாழ்வையோ (அல்லது வாழ்வின் தருணங்களையோ) தேட முடியாது. அதற்கு எந்த வித்த்திலும் வழிகாட்டியாக நவீனம் கடந்த கவிதைகள் செயற்படாது. ஆனால், கவிதைப் பிரதியில் இயங்கும் புனைவுச் சம்பவங்களுமக்கும், புறத்தே உண்மையாக மாறிவிட்ட புனைவுச் சம்பவங்களுக்குமிடையே இருக்கும் இடைவெளி என்பது ஒரு மனோநிலை மாற்றம் மாத்திரமே. அந்த மாற்றம், கவிதையனுபவங்களால் ஏற்படக்கூடிய ஒன்றுதானே தவிர வேறில்லை.
அந்த மனநிலை மாற்றம் எப்படிப்பட்டதெனில், இன்றைய வாழ்வும், சூழலும் நல்லநிலையில் இல்லை என்பது மாத்திரமல்ல, இற்றைவரை கண்ட்டைந்த மதங்கள், த்த்துவங்கள், விஞ்ஞானகொடைகள் எதனாலும் சரிசெய்ய முடியாதுபோயிருக்கின்ற வாழ்வும், சூழலும் என்பதும் அதற்குள்ளே அடங்கியிருக்கிறது.. எனவே, இப்படியான சூழலையும், வாழ்வையும் மீண்டும் நினைவூட்டவும் பாதுகாக்கவும் கவிதைக்குள் அமர்த்திவைக்க நவீனம் கடந்த கவிதைகள் அனுமதிப்பதில்லை. முடிந்தவரை வன்முறையற்ற, தனக்கு ஏற்ற, எந்தப் பாதிப்புகளுமற்ற, அதிலும் இருக்கின்ற வாழ்வைவிட அழகிய வாழ்வை கவிதைச் சம்பவங்களாகப் புனைந்து காட்டும் கற்பனைச் செயலை நவீனம் கடந்த கவிதைகள் அவாவி நிற்கின்றன.
ஆம், ந.பெரியசாமி அவர்களும் இந்த தொகுப்பினாடாக அதில் பங்கேற்க வருகிறார். இன்னும் நவீன கவிதைகளின் பணியைச் செய்கின்ற கவிதைப் பிரதிகளும் இதிலுண்டு என்பதையும் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தோட்டாக்கள் பாயும் வெளி
மாடிக்கு ஏறுகிறீர்கள்
அமைதியான சூழல் இருக்க
கொண்டு சென்ற தாளை விரித்து
பிடித்த முயலை வரைகிறீர்கள்
ஏனோ நிறைவுகொள்ளாதிருக்க
ஒன்றிரண்டு மரங்களை உருவாக்குகிறீர்கள்
அழகு சூழ மகிழ்ந்தீர்
கணத்தில் கவலையடைந்தீர்கள்
முயல் தனித்திருக்குமென
இணை ஒன்றை தருவிக்கின்றீர்
இரண்டும் முத்தமிட்டபடி
சந்தோசமாக உலவிக்கொண்டிருக்கிறது
உங்களுக்கான இடமற்றிருப்பதை உணர்ந்து
நிழலான மரத்தினடியில்
ஒரு கல்லைப் போடுகிறீர்கள்
அமர்ந்து வேடிக்கையில் களித்திருக்க
மெல்லிய சப்தத்தோடு இரண்டு தோட்டாக்கள்.

No comments:

Post a Comment