Sunday, March 22, 2015

தன் மூட்டையே பற்றிப் படரும் பாகற்கொடி

நன்றி - திணை

கவி என்பவன் தன் சுய வியாபகத்துக்காக உற்பத்தியாக்கும் சரக்கு அல்ல.
கவிதை உண்மையில் நடைமுறை வாழ்வில் சம்பவிப்பது
                                                                                                                                -பிரமிள்

ஏனிந்த மேகங்கள் ஊர் ஊராக திரிகின்றனவென ஆதங்கம் கொள்ளும் ரோஸ் ஆன்றா தன் நிலத்தின் மனங்களையும் வண்ணங்களையும் அதன் பண்பு மாறாது அத்துத் தெறித்த பாசி மணிகளாகக் கிடக்கும் வார்த்தைகளில் தனக்கானதை கொத்திச் சேகரித்து நமக்கான வாழ்வின் அனுபவங்களையும் கீற்றாக காட்டிச் செல்கிறார்.

தன் மூட்டையே சுற்றி படர்ந்து பூத்துக் குலுங்கும் பாகற்கொடியென  சுட்டுப் பொசுக்கினாலும் எனக்கான இடத்தில்தான் நிற்பேன் என தன் ஆளுமையில் நம்பிக்கையோடு இருப்பவன் வாழ்வில் அன்றாடங்களில் நிகழும் போக்குகளில் சமூகம் எவ்வாறெல்லாம் குறுக்கிடுகிறதென அறியத் துவங்க கடும் சினம் கொள்பவனை பிரியங்கள் பாந்தமாய் இருக்கச் சொல்லும் வேண்டுதல் இயல்பாக இருந்தபோதும் ஆத்திரம் கொண்டு சினத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன கவிதைகள். இச்சினத்தை சமயங்களில் பகடியாகவும் வெளிப்படுகிறது.

குவாரி குத்தகைதாரர்கள் சூழல் குறித்து அறம் போதிப்பது போன்று பூக்காமலிருக்கும் சிலுவை மரத்தினடியில் அமர்ந்து அன்பை போதித்து வாழச் சொல்லி எவரும் எளிதில் நெருங்கிவிடாது பறண்டி பெரிதாக சுவரெழுப்பும் பெருச்சாளிகளின் இரட்டைத்தனமான வாழ்வு குறித்தும், என்றென்றும் பீடத்திலிருப்பவன் பீடத்திலேயே இருப்பது குறித்தும் பகடி செய்பவர், வாஸ்துக்காரன் சொல்லியவாரே அமைந்த வீட்டில் குடியேறியதால் அடிக்கடி சகியின் அணைப்பிற்கு உள்ளாவது குறித்த குசும்பையும் வெளிப்படுத்துகிறார்.

தொகுப்பில் தொட்டாற்சிணுங்கியை இன்னொருக்கா சுருங்கச் செய்து விளையாடும் சிறுவனும் வந்து போவது நாம் பால்யத்தில் கொஞ்சம் விளையாண்டு வரச் செய்கிறது.

 எல்லோருக்கும் இயல்பாக படுவது கவிஞர்களுக்கு வேறொன்றாக தெரியும். அவசரமற்ற மனநிலையும் அதற்கு தோதாக இருக்கும். வயலில் மொட்டுக்களாக அமர்ந்திருக்கும் கொக்கு, வீழ்ந்தெழும் அதீதப் பறவையின் சிறகடிப்பு, பூக்களின் கைபிடித்து பாதுகாப்பாக  கரை சேர்க்கும் காற்று, பயந்து விழும் கனி, கண்ணாடியின் உட்புக முயற்சிக்கும் முத்துக் குயில், அணில் கடித்து மீந்ததை இருட்டுக்குள் கொண்டு போகும் வௌவ்வால்களென தொகுப்பில் லயித்து வாசிக்கவும் செய்திடுகிறார்.

வாழ்வில் நம் அவசர புத்தியால் எடுக்கும் பிழையான முடிவுகள் ஏற்படுத்தும் வினைவுகளை அறிந்தும் நிதானமற்று இருப்பது இயல்பாகிப்போவதை சிறகு ஒடித்து வந்தது நுணுக்கங்களை அறிந்து கொள்ளாது கழுகின் வாயில் சிக்கிக் கொள்வதாக முடித்திருக்கும் கவிதை நன்றாக சித்தரிக்கிறது. தொகுப்பில் தலைப்பு இல்லாதிருப்பது இப்படி எழுதும்போதோ அல்லது குறிப்பிட்டு சொல்லும்போதோ பக்க எண்ணை நினைவில் கொண்டு சொல்ல இயலாது இவ்வாறான தடுமாற்றம் ஏற்படுத்துவதை ரோஸ் ஆன்றா கவனத்தில் கொள்ளலாம்.

பெரும் இரைச்சலில் சிக்கிக் கொள்ளும் வலியை ஓடி நசுங்கும் நீர் பாட்டிலாக்கி, பங்காளிச் சண்டையில் கேட்பாரற்று நிற்பவர்களின் துயரை மழை நீராக வடியச் செய்து, கெடா குட்டியை ஈனாத ஆட்டை கொண்டாடும் சமூகத்தை அன்னம்மையாக காட்டி, வீட்டுச் செடியோடு தன் கம்பீரத்தை இழக்க விருப்பமற்று கருகிப்போகும் காட்டுச் செடியின் மூலம் இடமாற்றமே வாழ்வு என இச்சமூகம் நிர்பந்தப்படுத்தி வைத்திருக்கும் பெண்களின் துயர் கூறி, தொட்டிகளில் விடப்படும் மீன் குஞ்சுகள் இறந்துபோவது நியதியாக்கப்பட்ட அவலத்தோடு, வீட்டிலிருக்கும் பொருட்களில் தன்னை கரைத்துக்கொண்ட அப்பாவின் நினைவுத் துயரென வாசிப்பவர்கள் தன் சார்ந்த துயரங்களிலிருந்து மீட்டெடுக்கவும் செய்கிறார்.

வீட்டின் வெளியில் எரியும் விளக்கு வெளிச்சம் பக்கத்து வாசலுக்கு போய்விடாதபடி பார்த்துக்கொள்ளும் பெரும்பாலானவர்களின் மனப்போக்கு உடன் இருக்கும் உயிரிகள் மீதான கரிசனத்தை துடைத்து போட்டுவிட்ட சூழலில் வாழ்கிறோம் என்பதை ரோஸ் ஆன்றாவும் நினைவூட்டுகிறார். அலைபேசி டவரால்தான் சிட்டுக்குருவிகள் அழிந்துகொண்டிருக்கின்றன எனும் உரையாடல் உண்மையல்ல குருவிகளுக்கான வாழ்விடங்கள் சுருங்கிப்போனதுதான் உண்மையான காரணம் என்றொரு ஆய்வு வந்ததை நினைவூட்டும் விதமாக இருக்கிறது குஞ்சு பொறிக்க அலையும் தாய் பறவையின் துயர் கூறும் கவிதை. வெட்டுக்காரன் சுற்றிப் பார்த்து போனபின்பு மரத்திற்கும் பறவைக்குமான நெருக்கம் குறித்து நினைவில் தைக்குமாறு ரோஸ் அன்றாவின் வரிகள் உள்ளன.

''வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் மரம் செடி கொடிகளின் பெயரைக்கூட தெரியாத படைப்பாளர்கள்தான் அதிகம். அதில வந்தமரும் குருவிகளின் பெயரைக்கூட தெரியாது, அவர்தம் படைப்புகளில் ஒரு மரம் ஒரு குருவி என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள்'' என கொம்பு(குறிஞ்சி பெரும்பொழுது 2014) இதழில் கோணங்கியின் 'த' நாவல் குறித்த கட்டுரையில் கோணங்கி பயணிக்கும் ஊர்களில் இருக்கும் அரிதான மரங்கள், உயிரினங்களின் பெயர்களை பதிவுசெய்யும் அவரின் நுணுக்கம் குறித்து சிலாகிக்கையில் மேற்கண்டதை சொல்லும் நக்கீரனின் கூற்றை நாம் எவ்விதத்திலும் மறுக்க முடியாது. நாம் வாசிக்கும் கவிதை கதைகளில் இப்படியான அபத்தத்தை பார்க்கத்தான் செய்கிறோம். ஆனால் ரோஸ் ஆன்றா அவ்வாறெல்லாம் இல்லாது தன் மன்சார்ந்த (கொன்ன மரம், வராச்சி மரம், கும்புடுபுட்டான், முத்துக் குயில்) போன்று மரம் செடிகொடி மற்றும் உயிரினங்களின் பெயர்கனை கவிதைகளில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

புது ஊருக்குச் செல்ல அப்பகுதியின் சொல்லாடல்களை எளிதில் உள்வாங்கிக்கொள்ள இயலாது மலங்க முழித்து பேசுவோரின் செய்கையை உற்றுப்பார்த்து அர்த்தம் கொள்வதை போல், பற்றுதலையும் மெனக்கிடலையும் கோரும் கவிதைகளோடு வந்திருக்கும் ரோஸ் ஆன்றாவின் 'நிலமெங்கும் வார்த்தைகள்' கவனிக்கப்பட வேண்டிய தொகுப்பாக வந்திருப்பது மகிழ்வுக்குரியதாக இருக்கிறது.

வெளியீடு
புது எழுத்து
2/205 அண்ணா நகர்
காவேரிப்பட்டினம்-635 112
விலை-ரூ.70

No comments:

Post a Comment