Tuesday, November 3, 2015

நன்றி- தீராநதி.

தோட்டாக்கள் பாயும் வெளி
மதிப்புரை- கமலாலயன்

'நதிச்சிறை', 'மதுவாகினி' என முதலிரு தொகுப்புகளுக்குப் பின் ந.பெரியசாமியின் மூன்றாவது கவிதைத் தொகுதியாக 'தோட்டாக்கள் பாயும் வெளி' வந்திருக்கிறது. சம காலத்து வாழ்க்கையில் குழந்தைகள், பெண்களின் துணையுடன் அடைகிற, அடையத் தவிக்கிற சின்னச் சின்ன சந்தோஷங்களைப் பேசுகிற கவிதைகள் இவை. எதிர்ப்படுகிற துயரங்கள், எதார்த்தங்களின் அவலங்கள், ஏமாற்றங்களையும் சொல்கின்றன. சிறு சிறு சம்பவங்களை, அல்லது மன வெளியில் உருவாகும் காட்சித் துணுக்குகளை கவித்துவத் திரைச்சீலைப் பின்னணியில் கோட்டோவியங்களாகத் தீட்டிக் காட்டுகிறார் கவிஞர்.

மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுவதில் தொடங்கும் பயிற்சி, பெரிய சைக்கிளில் பெடல் அடித்து ஓட்டுகிற நிலையை அடைவதற்கும் உடலெங்கும் சிராய்ப்புகள், முட்டிகளில் காயங்கள் என 'விழுப்புண்கள்' பெற்ற பிறகே ஓரளவு தைரியமாக சைக்கிள் ஓட்ட முடிகிற அளவுக்குச் செழுமையடைகிறது. இது தன் கவிதைகளுக்கும் பொருந்தும் என்கிறார் பெரியசாமி. ¢

குழந்தைகளின் மன உலகம் குறித்த கரிசனமும் அதன் வெளிகளில் பயணித்து பதிவுகளாக்க முற்படும் உந்துதலும் சமீப காலங்களில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. பள்ளி செல்லும் வயது முன்பெல்லாம் 5 அல்லது 6ஆக இருந்தது. இப்போதோ ஒன்றரை வயதானதுமே மழழையர் பள்ளி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகிவிட வேண்டிய நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுகிறார்கள். இந்த 'வலியின் சித்திரங்கள்' மனதில் அச்சமூட்ட ''பதட்டத்தில் உடல் நடுங்கினோம்/நாளை அனுப்ப வேண்டும் -பள்ளிக்கு'' என பெற்றோர் மனம் பதைப்பது கவிதையாகிறது.(பக்-10,11)

'அணிலாடு முன்றில்களுக்கு இன்றைய அபார்ட்மெண்ட் வாழ்க்கை வெளிகள்' இடமளிப்பதில்லை. எனவே, ஒண்டுக் குடித்தன அறைகளினுள் அணிலோ, குருவியோ, பூனைகளோ அழையா விருந்தாளிகளாய் நுழைந்து எட்டிப் பார்க்கின்றன. இங்கு வருகிற அணிலுக்குக் குடில் அமைத்து உணவு சேமிக்கத் தொடங்குகிறார் கவிஞர். இருப்பின் கொஞ்சலும், இல்லாமையின் தவிப்பும் இருவருக்கும் பொதுவான உணர்வுகள். அணிலின் மொழி பரிச்சயமாகி, உறவு நீடிக்கிறது. மகளின் பிடிவாதங் கருதி, அணில் உடலின் கோடுகளின் கதையைக் கூறுமகிறார் கவிஞர். அடுத்தடுத்த நாட்களில் எஞ்சியிருப்பது சிறு குடிலும் அதன் வீச்சமும் மட்டுமே.

மண்ணின் மொழியறிய முற்படுகிறவர்களுக்கு மழை வரும் நாட்கள் மிகவும் உவப்பானவை. பெய்யும் மழை முழுவதையும் சுவடு கூட எஞ்சிராமல் குடித்துவிட முடிகிறது அவர்களால். நீர்த்தாகமெடுத்து அலைபாயும் வேர்களும், ஆற்று மணற்பரப்பும், குளம் - குட்டைகளும் வெடித்துக் கிடக்கும் நிலப் பிளவுகளும் உயிர் நீரை உறிஞ்சியபின் உயிர்ப்படைகின்றன. காய்ந்து பழுப்பேறிக் கிடப்பவை பசுமையடைகின்றன. இந்த 'உயிர்ப்பு' மிக்க பரிமாற்றங்களின் வளர்ச்சிப் போக்கில் மழை வரும் நாளில் மண்ணின் உடலாகவே மாறிவிடுகிற விந்தையைச் சொல்கிறது ஒரு கவிதை (பக்-18.).

ஒழுகிக் கொண்டிருக்கும் வீட்டின் மனிதர்கள்,. வீட்டினுள் மழை ஈரம் படாமல் தப்பிப் பிழைக்கும் சில மூலைகளில் ஒடுங்கிக் கொண்டு, சொட்டும் நீர்த்துளிகளால் நிறைந்து வழியும் பாத்திரங்களை இடம் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு நாட்களைக் கடத்துவது எதார்த்தமான ஒரு வாழ்நிலை. இந்தப் படிமத்தை ஒன்றை மறந்து புதிதாக வேறொன்றைக் கேட்கும் மகனின் ஆசைகளை எதிர்கொள்வதற்கு நாளை, அடுத்த வாரம், கட்டாயம் வரும் மாதம் என பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கும்  பெற்றோருக்கு ஒப்புமையாக்கி இருக்கிறார் பெரியசாமி. உவமை பழையது. வாழ்நிலைக்கூறு புதியது. இத் தொகுப்பின் பல கவிதைகளில் இத்தகைய தன்மைகளைக் காண முடிகிறது.

குழந்தைகளின் உலகில் பயணிக்கும் மற்றொரு கவிதை- 'வெளியே மழை பெய்தது'. மேலும், 'தலையணை', 'துணைவானம்', 'புதைந்தகுரல்கள்', 'நட்சத்திரத்தை அறையுள் அடைத்தவள்', 'பூங்கா தேவதை', 'நிழல் சுவை', 'நிலையானது', 'சித்திரச் சுவர்கள்', 'சாயற்கனி' இப்படியாக இத்தொகுப்பின் பல கவிதைகள் பிஞ்சு மனங்களுக்குள் பெரும் படைப்பாற்றல் நிறைந்த தூரிகைகள் ஓயாமற் பிரசவித்துக் கொண்டிருக்கும் உயிரோவியங்களை இடம் பெயர்த்து வார்த்தைப்படுத்துகிறவையாய் அமைந்துள்ளன.

அடுக்கு மாடிக் குடியிருப்புகளால் இன்று விண்முட்ட உயர்ந்தோங்கிய கட்டடங்களின் அடித்தளங்களினுள் புதையுண்டு கிடப்பவை, நூற்றாண்டு காலங்களைக் கடந்த பெரும் நீர் ஆதாரங்கள் என்பது நாமெல்லாரும் அறிந்ததே. நீர்நிலைகள் மட்டுமின்றி, மரம், செடி-கொடிகள், மண் உள்ளிட்ட இயற்கைப் படைப்புகளும் நம்முள் எண்ணற்ற சிற்றுயிர்களையும் சேர்த்தேதான் பராமரித்து வந்திருக்கின்றன. இனியும் தொடர்ந்து பராமரிக்கப் போகிறவை அவைதாம். ஆனால் அந்த உயிராதார நீர்ப்பரப்புகளையும், வனங்களையும், உணவு வயல்களையும் மனம்போன போக்கில் அழித்துக் கொண்டிருக்கிற இன்றைய பெருவாணிகக் கூட்டங்கள், கேளாக் காதுகளுடையவையாகவும், பாராமுகங்களைக் கொண்டவையாகவுமே இருக்கின்றன. இந்தக் கூட்டத்தினரின் கேளாக்காதுகளுக்கு உரத்த குரலில் முழங்கித் தீர வேண்டியதன் அவசியத்தை 'புதைந்த குரல்கள்' கவிதை (பக்-63) உணர்த்துகிறது.

படைப்பாக்க மனநிலையைத் துணைக்கொண்டு புனைவுலகில் நாம் தொலைந்து போக முற்படும் வேளைகளில் சிறகுகள் நினைவூட்ட தரையைப் பார்க்கிறோம். வீடுகள் நிலவுகளாகவும், நிலவெளி வானமாகவும் விரிவுகொள்கின்ற விந்தை நிகழ்கிறது. (புறா-பக்-64) இதையே தலைகீழாக்கிப் பார்க்கிறாள் ஒரு சிறுமி. அவள் வரைந்தனுப்பிய துணை வானம், ஒரு நிலா, ஒரு சூரியன், நிறைய நட்சத்திரங்கள்தாம் இன்று நாம் காண்கிற பால்வெளி வீதிக் காட்சிகள் என்கிற கவிதை (துணைவானம்-பக்-65) நெஞ்சை ஈர்க்கிறது.
தலைப்பு இடப்படாத ஒரு கவிதையின் இறுதி வரிகள் இவை. ''தன் உயிரை எழுத்தாக்கி மிதக்கச் செய்தாள் யாரேனும் சிறுசிறு கற்கள் கொண்டு நிரப்பி வழியும் நீரில் தன்னை வாசிக்கக் கூடுமென்று'' படைப்புக் கலைஞர்களின் உயிரைக் குடித்துக் குடித்தே உருப்பெற்று வெளிப்படுகின்றவை கவிதைகள், சிற்பங்கள், ஓவியங்கள், காவியங்கள், இசைப்பாடல்கள்- இன்ன பிற யாவும் கேட்பதற்குச் செவிகளும், பார்ப்பதற்குக் கண்களும் வேண்டுமே''.

உரத்துப் பேச வேண்டிய காலமாக நம்முடையது ஆகிவிட்டது. சமூக வெளியில் நிகழும் அவலங்கள் குறித்து முணுமுணுப்பையேனும் வெளிப்படுத்தத் தவறுகிற கலைஞர்கள் என்றேனும் ஒரு நாள் காலத்தின் விசாரணையிலிருந்து தப்பவே முடியாது. பெரும் வன்முறைகளையும், கொலைவெறித் தாக்குதல்களையும் அதிகார வர்க்கத் தடைகளையும், தோட்டாக்களையும் முன்னெப்போதையும் விட எதிர்கொண்டே தீரவேண்டிய நாட்களாகி விட்டன இன்றைய நாட்கள். சுற்றி நடக்கின்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல், நமக்கெதுக்கு ஊர் வம்பு என நல்லத்தனமாக புனைவுப் போர்வைகளைப் போர்த்திக் கொண்டு கனவுலகவாசிகளாயிருப்பவர்கள் தாம் எழுத்துலகில் அதிகம். இது ஏதோ இன்றைய நிலைமை மட்டுமன்று. எந்தக் காலத்திலும், எதிர்ப்புக் குரலெழுப்பி மாற்றும் சிந்தனைகளை முன் வைப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.

அதே வேளையில், தோட்டாக்கள் பாயும் வெளி தான் இது என நன்கறிந்தே அந்த வெளிகளை ஊடறுத்துக் கொண்டு முன்னேறிப் போய்ப் புதுப்பாதையை உருவாக்குவதற்காக, நெருஞ்சி முட்கள் நிரம்பிக் கிடக்கும் ஒற்றையடிப் பாதையில் நடக்க முற்படுகிறவர்கள் சிலர்தாம். எனினும் அவர்களும் இதே சமகாலத்தின் குரல்களை எதிரொலித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அத்தகையவர்களுள், ந.பெரியசாமியும் ஒருவர் என நிறுவுகிறது 'தோட்டாக்கள் பாயும் வெளி'

வெளியீடு-புதுஎழுத்து

நன்றி- தீராநதி.

1 comment:

Post a Comment