Wednesday, December 30, 2015

வெள்ளிக்கிழமை சுவரின் பளிச்சிடல்கள்...


புதுப்பட போஸ்டரை தாங்கி நிற்கும் வெள்ளிக்கிழமை சுவர்போல் பளிச்சிடுகிறது மனம். அப்படியானதொரு வல்லமையை கொண்டிருக்கிறது மொழி. அதுவும் கவிதைகளில் பல சித்துகளைச் செய்துடுகிறது. சொல்லப்பட்ட விதம், முடிப்பு, துவக்கம், எடுத்துக்கொண்ட பாடு பொருள் என ஏதோவொன்றில் தன் மாயத்தை வாசிப்பவனுக்கு கடத்திடுகிறது விரல் படும் தேன் மனதை இனிக்கச் செய்திடுவதுபோல்.  'அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்' தொகுப்பில் காலதச்சனும் வெள்ளிக்கிழமை சுவர்போல் பளிச்சிட செய்திடுகிறார் அவரின் மொழியால்.

விடுமுறை நாட்களின் நிகழ்வுகளை பட்டியலிட்டு, பத்துநிமிடம் மிஸ் என கெஞ்சும் சரஸ்வதியை ஆட்டோவில் பயணிக்கச் செய்து, சுயம் அப்பாவின் இறப்பை மறக்கச் செய்யும் எனும் உண்மை கூறி, ஆம்புலன்ஸ் அலாரத்தை இசையாக்கி ரசிக்கப்படும் இடங்களைக் கூறி, பூங்காக்களும் காத்திருக்கும் ஏர்போன் மாட்டிய தேவதைகளை மனதில் ஓடவைத்து, ஒரு ஆண்டின் 365 திடுக்கிடலை நாமும் உணரச் செய்திடுகிறார்.
எழுத்து ஒருவரின் சுபாவத்தை வெளிக்காட்டிவிடும். காலதச்சனின் மிருதுவான சுபாவத்தை அவரின் வரிகளிலிருந்து கண்டடைய முடிகிறது.

நெளிச்சிரிப்பில் பின்தொடரச் செய்து, தவறவிடும் கண்ணாடிக் குவளையின் உடையும் சப்த இடைவெளியை உதடுகளாக காட்சிபடுத்தி,  மதுமிதாவிடம் இருந்து பச்சைக்கிளியின் பரிசளிப்பை எதிர்பார்த்து தன்னை பிளந்து உண்ணக் கொடுக்கும் தயார் நிலையில் இருப்பவனுக்கு கருங்கிளியும், முகத் திருப்பலுமே கிடைக்க மூச்சு முட்டக் கிடந்து, அந்தி நடையில் எள்ளுப் பூக்களிடம் மனம் கொடுத்து, அம்மாவின் நினைவு, திருடிய கைக்குட்டை, மறைத்த மதுப்புட்டி, மறந்தபோன ஸ்னாக்ஸ், பிச்சைக்காரனின் ஏந்திய கையென மாறும் நினைவு அடுக்குகளின் காட்சியோடு நடை முடித்திருப்பது நம்மின் நடை நினைவுகளையும் காட்சிபடுத்தின கவிதைகள்.

எவ்விதமான மெனக்கிடலுமற்று இயல்பாகவே சொல்லப்படும் காட்சியில்  நமை லயித்துவிடச் செய்திடுகிறார் காலதச்சன்.

பசும்புல்லின் நுனியில் பாறைகளை இறக்கி வைத்து, வண்ணத்துப்பூச்சியின் மேலமர்ந்து சவாரி செய்து, நிசப்தம் உள்ளவரை நறுமணம் வாழும் எனும் உண்மையை கண்டடைந்து சுஹாசினியின் புன்னகையில் ஓய்வுகொள்கிறார்.

வேறுவேறான பார்வைகளை கண்டடைய தொடர் பயணம்  அவசியமாகப்படுகிறது. காலதச்சனும் தன் நெடிய பயணத்தில் கண்டடைந்த பார்வைகளை கவிதைகளில் நமக்கு கடத்த முற்பட்டுள்ளார்.

எதுவுமற்ற வீட்டில் எல்லாமும் இருக்கம். எல்லாமும் இருக்க ஏன் பூட்டிச் செல்ல வேண்டுமெனும் கேள்வியோடு, பால்யத்தின் மரக்குதிரையில் பயணித்து, அழகான ஆறு என்றான்/சித்தார்த்தன்/தோணிக்காரன்/தலையசைத்தானெனும் சமூக உண்மையை கண்டடைந்து, என்றுமே எனக்கு வாழக்கிடைக்காத உங்களின் சௌகரிக வாழ்வை கொஞ்சம் நானும் வாழ்ந்து பார்க்கிறேன் என அனுமதி கோரி, நீல வயலையும் பச்சை வானையும் தொடும் நாரையை ரசித்து, குழந்தைகளின் கேள்விகளுக்கு குட்டுகளை பதிலாக்குபவர்களை பரிகாசப்படுத்தி, பீங்கான் லில்லி பூக்கள் மணக்கும் தருணம் அறிந்து, தூக்கிட்டுக் கொண்டவனின் முந்தைய நாட்களின் கருணையை வியந்து, உறக்கத்தில் நடப்பவனின் வலியை நகைமொழியோடு பதியவைத்து, பெயரற்று எண்களாக மாறிக்கொண்டிருக்கும் அபத்தத்தை உணர்த்திடுகிறார்.

சினிமா மொழியும் காலதச்சனுக்கு பரிச்சயம் என்பதால் ரசிக்கத்தக்க நிறைய்ய காட்சியமைப்புகளை தொகுப்பில் நாம் கண்டடையச் செய்துள்ளார்.

வெளியீடு
மலைகள்
119, முதல்மாடி, கடலூர் மெயின் ரோடு
அம்மாப்பேட்டை, சேலம்-636003
விலை-80

நன்றி-மணல் வீடு

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று.. வாழ்த்துக்கள்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment